vp

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு 2100 ரூபாய் லஞ்சமாக, ஊழியர்களுக்கும் பிரித்து தரச்சொல்லி மணியார்டர் மூலம் பணம் அனுப்பியுள்ளார் உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள திருநாவலூர் சுதா என்ற பெண். இந்த செய்தி வருவாய்த்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அந்த பணத்தோடு அதற்கான காரணத்தையும் இரண்டரை பக்கமுள்ள புகாரையும் அனுப்பியுள்ளார் சுதா. ஏன் என்ன காரணம் என சுதாவிடம் கேட்டோம்.

Advertisment

எனது அப்பா தொப்பையன், அம்மா குப்பம்மாள். நான் உள்பட 4 பெண் குழந்தைகள். அப்பா கடந்த 30.08.2016ல் இறந்துபோனார். அவரது இறப்புக்கு சான்று கேட்டு விண்ணப்பித்தோம். இறப்பு சான்று கொடுக்காமல் அலைக்கழித்தனர். அதயைடுத்து குடும்ப தலைவர் இறந்தால் ஈமச்சடங்கு நிதியாக அரசு 12,500 ரூபாய் வழங்கும். அதை பெற எனது தாயார் பெயரில் மனு அளித்தோம். இறப்பு சான்று உதவி தொகை பெற வேண்டுமானால் 3000 ரூபாய் மொத்தமாக கொடுங்கள் என்று லஞ்சம் கேட்டு பேரம் பேசினார் கிராம உதவியாளர் பலராமன். எழுத படிக்க தெரியாதவர் என் தாயார். வறுமையில் உள்ளது எங்கள் குடும்பம். 3000 ரூபாய்க்கு எங்கே போவோம். தர வசதியில்லை என்று மன்றாடினோம் பணம் தந்தால் உதவித்தொகை இல்லையேல் நடைறை கட்டு என்று துரத்திவிட்டனர்.

மாவட்ட ஆட்சியருக்கு இதுபற்றி புகார் எழுதினோம். பதில் இல்லை. தகவல் பெறும் உரிமைபடி தகவல் கேட்ட பிறகு 1.9.2016ல் எனது அப்பா இறப்பு சான்று மட்டும் அனுப்பினார்கள். அதை இணைத்து ஈமச்சடங்க உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தோம். தாசில்தாரிடம் 7.11.2016ல் சமூக நல தாசில்தார் சபாபதி, உங்கள் மனு விசாரணையில் உள்ளது என்றார்.

Advertisment

பலமுறை நடையாய் நடந்தோம். அப்போதும் கிராம உதவியாளர் பலராமன் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உதவிப்பணம் வரும் இல்லையேல் வராது. இந்த பணம் எனக்கு மட்டுமல்ல தாசில்தார் சபாபதி, ஆய்வாளர் பாஸ்கரன், கிராம அதிகாரி மகாலிங்கம் என பலருக்கும் பங்குபோட்டு கொடுக்க வேண்டும். எனவே பணத்திற்கு ஏற்பாடு செய். இல்லையேல் எந்த அதிகாரிக்கு புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது. எங்களிடம் வந்துதான் ஆகணும் என கறாராக பேசினார்.

மாதங்கள் கடந்தன. மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் எழுதினோம். அரசு நிதி ஒதுக்கியவுடன் சீனியாரிட்டி அடிப்படையில் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்று பதில் வந்தது. அதன் பிறகு எனது தகப்பனாருக்கு பிறகு இறந்தபோன பலருக்கும் உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் உதவிதொகை கொடுத்துள்ளது. எங்களுக்கு மட்டும் தரவே இல்லை. காரணம் பாழாப்போன லஞ்சம். எனவேதான் இவர்களை லஞ்ச வெறித்தனத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்று எங்களால் முடிந்த 2100 ரூபாயை கடன் வாங்கி அனுப்பியுள்ளோம். அதை அவர் தாசில்தார், ஆய்வாளர், கிராம அதிகாரி, கிராம உதவியாளர் என அனைவருக்கும் பிரித்து கொடுத்த பிறகாவது எங்களுக்கு உதவி தொகை வருமா என்று பார்ப்போம் என்கிறார் சுதா.

அரசு திட்டங்களில் உதவிகள் பெற மேலே இருந்து கீழே வரை லஞ்சம். அதிலும் திருமண உதவி பெற்று பெண்கள் தாலியேறவும் லஞ்சம். கணவர்களை இழந்த பெண்கள் தாலி அறுக்கும்போதும் லஞ்சம். இந்த ஈவு இரக்கமற்ற அரசு ஊழியர்கள் என்ற பெயரில் பணவெறிபிடித்த, அதுவும் லஞ்ச அரக்கணுக்கு எப்படி யார் தண்டனை கொடுப்பார்கள். எங்களைப் போன்ற ஏழைகள் பாடு அரசுக்கு எப்போது புரியும் ’’என்கிறார் சுதா கோபமும், வெறுப்புமாக.