Skip to main content

“பிராமணர்கள் தொடர்ந்து காயப்படுத்தப் படுகிறார்கள்..” - நாராயணன்

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Brahmin Association Leader Narayanan press meet

திருச்சியில் நாளை மறுதினம் (31.12.2023) தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிர் அணி மற்றும் இளைஞரணி மாநில மாநாடு, திருவானைக்காவலில் நடைபெறுகிறது. மாநாடு குறித்து திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் என். நாராயணன்.

இந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; “தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டு பிராமணர்கள் காயப்படுத்தப்படுகிறார்கள்; இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் பிராமண சமூகத்தினரின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டுமே என தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இது தவறான தகவல். 7 சதவீதமாக இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 12 லட்சம் பிராமண குடும்பங்கள் உள்ளன.

45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக பிராமண சமூகம் இருந்தாலும், பிராமண சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவில் உயர் பொறுப்பில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை  சொற்பமாகவே உள்ளது.

பிராமண சமூகத்தில், திருமணம் என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆண் பெண் விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருமணம் சவாலாகி வருகிறது. எனவே வெளி மாநிலங்களில் உள்ள பிராமண குடும்பங்களோடு திருமண பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் எவ்வித பாகுபாடுமின்றி சமத்துவத்தை நிலைநாட்டுவதே எங்களின் தலையாய கடமையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் மேற்கொள்ளும்” என்றார்.

சார்ந்த செய்திகள்