
திருச்சி பாலக்கரையில் நேற்று சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 15 வயதுள்ள இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுவர்கள் இருவரும் கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அவர்கள், வீட்டுக்குத் தெரியாமல் பணம், நகைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை ரயில் நிலையம் வந்தபோது சூர்யா என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகி தங்களைத் திருச்சிக்கு அழைத்து வந்து கத்தியை காட்டி மிரட்டி, பணம் நகைகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டதில் பாலக்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், பிரசாத், அசோக்குமார், வின்சென்ட் ராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து பணத்தை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 13 லட்சத்து 16 ஆயிரம் பணம் மற்றும் 9 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். சிறுவர்கள் குறித்தும், நகை, பணம் மீட்கப்பட்டது குறித்தும் கோவை போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவர்களில் ஒருவன் 22 லட்சம் பணம் மற்றும் 22 பவுன் நகையுடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.