
தூத்துக்குடியில் தெர்மல் நகர் கேம்ப் ஒன் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் அந்தோனிராஜ்(54). இவர் அப்பகுதியில் உள்ள சிஎஸ்.ஐ. தேவாலயத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த தேவாலயத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் சிறுவர் சிறுமியர்களுக்கு தினமும் பைபிள் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம் போல் ஆலயத்தில் பைபிள் வகுப்பு நடைபெற்ற கொண்டிருந்தது. இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பங்கேற்றிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் வாயில் புகையிலை வைத்துக்கொண்டு காலை நீட்டி அமர்ந்து இருந்துள்ளார். அந்த சிறுவனை ஆலய ஊழியர் சாமுவேல் அந்தோனிராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் சாமுவேல் அந்தோணி ராஜை அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார்.
பின்னர் மதிய நேரத்தில் அந்த சிறுவன் தனது நண்பர்களான தெர்மல் நகர் கேம்ப் ஒன் பகுதியைச் சேர்ந்த சலீம் மகன் முகமது மீரான் உசேன்(20) மற்றும் இரண்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு தேவாலயத்துக்குள் சென்று அங்கிருந்த சாமுவேல் அந்தோணி ராஜிடம் தகராறில் ஈடுபட்டு தன்னிடம் மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியுள்ளனர். சாமுவேல் அந்தோனிராஜும் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இருப்பினும் வெறியுடன் இருந்த அந்த கும்பல் அந்தோணி ராஜ் தலையில் கத்தியால் குத்தியதோடு அவரது செல்போனையும் பிடுங்கி உடைத்தெறிந்தனர். பின்னர் தேவாலயத்தின் மீது கல் எரிந்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் சாமுவேல் அந்தோனிராஜின் அலறல் சத்தம் கேட்டு தேவாலயத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்த சாமுவேல் அந்தோணி ராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தெர்மல் நகர் கேம்ப் ஒன் பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் உசேனை (20) கைது செய்தார். மேலும் தலைமறைவான மூன்று சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவனுக்கு அறிவுரை கூறிய சபை ஊழியரை தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி