The boy's shocking confession in the grandmother case!

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி செல்லபாக்கியம்(68). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்குப் போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற செல்லபாக்கியம், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை அவரைக் காணாமல் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், மகள்கள், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பழனிவேல் வளவனூர் காவல் நிலையத்தில் தனது தாயார் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.

Advertisment

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறினர். அதையடுத்து போலீசார் அந்த சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், சிறுவன் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளான். இறுதியில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

Advertisment

அச்சிறுவன், போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் ஏழாவது வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு ஜே.சி.பி. இயக்குவதற்குத் தெரியும். தற்போது சென்னையில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்தபோது மூதாட்டி செல்லபாக்கியம் வைத்திருந்து 2000 ரூபாய் பணத்தைத் திருடி விட்டேன். நான் திருடியதை அவர் கண்டு பிடித்துவிட்டார். என்னிடம் அந்த பணத்தைத் திருப்பி தந்து விடுமாறு கேட்டு நச்சரித்தார். அவருக்குச் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு சென்னைக்குச் சென்று விட்டேன்.

மீண்டும் தற்போது சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்த நிலையில், என்னிடம் திருடிய பணம் 2000 ரூபாயை மீண்டும் கேட்டு நச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவர் தனியாக வரும்போது கொலை செய்து புதைத்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதை அடுத்து பாட்டியின் உடல் எங்கு உள்ளது என அந்த சிறுவனிடம் கேட்டபோது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சவுக்குத் தோப்பு வயல்வெளி பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கே புதைத்து வைத்துள்ளேன் என்றுள்ளார். அங்கு காவல்துறையினர் தேடும்போதெல்லாம், இங்கு, அங்கு என்று போக்கு காட்டி உள்ளான். ஆனால் மூதாட்டியின் உடல் எங்கு உள்ளது என்பதைக் காட்டவில்லை. சிறுவனின் செயலை கண்ட போலீசார் அவனை எச்சரித்தனர். அதன் பிறகு தனது வீட்டுக்கு அருகில் உள்ள கழிப்பறை செப்டிக் டேங்கில் மூதாட்டியின் உடலைப் போட்டு மூடி உள்ளதாக போலீசாரை அழைத்துச் சென்று காட்டியுள்ளான்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் அந்த கழிப்பறை செப்டிக் டேங்கில் இருந்து, அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கைது செய்த போலீசார் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி அரசு காப்பகத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.