Boyfriend incident woman if she avoids talking to him

வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு(33) திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது உறவு சபீனாவின் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லாத நிலையில், கடந்த 2 மாதங்களாக சபீனாபானு சுரேஷூடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்று நள்ளிரவு (22.05.2025)அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

Advertisment

இதையடுத்து சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை. வேறு யாருடனாவது தொடர்பில் உள்ளாயா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சபீனாபானு, 'இப்போது பேச வேண்டாம் எதுவாக இருந்தாலும் நாளை காலை பேசிக் கொள்ளலாம் இப்போது சென்று விடு' என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இதில் இருவரையும் சுரேஷ் இரும்பு ராடால் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பியோடியுள்ளார் . அவரை துரத்திச் சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக இரும்பு ராடால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பாகாயம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுரேஷின் மொபைல் போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு தனது அறையில் பேனில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் சடலமாக கிடந்தார்.சபீனாபானுவை கொலை செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisment

காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபீனாபானுவை கொன்று விட்டு அவரது ஆண் நண்பரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.