
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அபு (16) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடமுருட்டி ஆற்றுப் பகுதியில் உள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகில் குளிக்க சென்றுள்ளார். நேற்று மாலை 5 மணி அளவில் அபு உள்ளிட்ட 4 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அபு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நேற்று மாலை முதல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அபுவை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நேரம் கூடிக்கொண்டே போக அதிகளவில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் இடர்பாடுகள் எழுந்தது. அதனால், தேடும் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று காலை முதல் தீயணைப்புத் துறையினர் அபுவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு இச்சம்பவம் குறித்து அறிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் தேடுதல் பணியை பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுத்தார்.