
தென்காசியில் கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தடுமாறி கிணற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ். இவருடைய மகன் கணேஷ் குட்டி. அந்த பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த கணேஷ் குட்டி, மாலை வேளையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

நேற்று மாலை அருகில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. உடனடியாக சிறுவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் சிறுவன் கணேஷ் குட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த காட்சிகள் அருகிலிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.