
கன்னியாகுமரி மாவட்டம் பனச்சக்காலை பகுதியைச் சேர்ந்தவர்கள் அனில - அருணா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் அனிருத் என்ற மகனும் 2 வயதில் ஆரோன் என்ற மகனும் உள்ளனர். மாங்காய் பறிக்கும் தொழிலாளியான அனில் கடந்த சில மாதத்திற்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்து எழும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நடக்க முடியாத அளவிற்கு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அனிலும் அருணாவும் பேசிக்கொண்டிருந்த போது சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யை குளிர்பானம் என்று நினைத்து ஆரோன் குடித்துள்ளார். இதனைக் குடித்த சிறிது நேரத்திலே ஆரோன் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அருணா சிறுவனிடம் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வருவதைப் பார்த்து சந்தேகமடைந்துள்ளார். அத்துடன் அருகே மண்ணெண்ணெய் பாட்டிலும் கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் மண்ணெண்ணெய் குடித்தது உறுதியானது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.