The boy who climbed the tower because the security blocked

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது அற்பிசம்பாளையம் முத்தியால் பேட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி புனிதா(31). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. புனிதாவிற்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் புனிதாவின் கணவர் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியுடன் தமது குழந்தையைக் காண்பதற்காக நேற்று காலை 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.

Advertisment

அங்கிருந்த செவிலியர்களிடம் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது எங்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறி படியே பிரசவ வார்டு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்குப் பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டி ஒருவர் பெண்கள் பிரசவ வார்டு பகுதிக்குள் பெண்களை மட்டுமே அனுமதிக்க முடியும் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறி லட்சுமணனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் லட்சுமணனுக்கும் செக்யூரிட்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமுற்ற லட்சுமணன் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க உள்ளே சென்ற தம்மை உள்ளே விடாமல் தடுத்ததைப் பொறுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்திலிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisment

அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் விரைந்து வந்து செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்த லட்சுமணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கி அழைத்துச் சென்று அவரது மனைவி குழந்தையைப் பார்க்க அனுமதித்தனர்.