/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thoothu-ni.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தஏராளமான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் மகன், கத்திரிக்கோல், கத்தியை கழுவும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சேட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். அவரின் வலது காலின் 2வது விரலில் காயம் ஏற்பட்டதால் அந்த விரல் அழுகியுள்ளது. இதனால், அந்த விரல் அகற்றப்பட்டு அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, மருத்துவமனையின் 5வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உதவியாக அவருடைய 10வயது மகன் மருத்துவமனையில் இருந்தார். இந்த நிலையில், இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல், கத்தி, இடுக்கி உள்ளிட்ட உபகரணங்களை, அந்த சிறுவன் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் டீன் சிவக்குமார் சம்பந்தப்பட்ட வார்டில் தீவிர விசாரணை நடத்தினார்.
அதன் பின்னர், இது குறித்து மருத்துவமனையின் டீன் சிவக்குமார் கூறியதாவது, “கடந்த 2 நாட்களுக்கு முன்பு விரல் அகற்றப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்த கட்டை செவிலியர்கள் பிரித்து மருந்து போட்டு மீண்டும் கட்டு போட்டுள்ளனர். கட்டுப் போடுவதற்காக பயன்படுத்திய கத்திரிக்கோல் உள்ளிட்ட சில உபகரணங்களை படுக்கையின் அருகே வைத்துள்ளனர். இதனை தூய்மை பணியாளர்கள் சேகரித்து சுத்தம் செய்வது வழக்கம். ஆனால், அந்த உபகரணங்களை பார்த்த அந்த சிறுவனின் தந்தை, அந்த பொருட்களை கழுவி வைக்குமாறு தனது மகனிடம் கூறியுள்ளார்.
அதன் பேரில், சிறுவன் அந்த உபகரணங்களை எடுத்து சுத்தம் செய்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் சிறுவனை சுத்தம் செய்யச் சொல்லவில்லை. ஆனாலும், மருத்துவ உபகரணங்களை சிறுவன் சுத்தம் செய்வது தவறு தான். இது தொடர்பாக, அந்த வார்டில் பணியில் இருந்த அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவதற்காக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)