Skip to main content

பேங்க் மேனேஜரிடம் வழிப்பறி செய்த சிறுவன்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

The boy snatched chain from bank manager ...


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேனேஜராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், பணி முடிந்து, தனது பைக்கில் தனது ஊரான மண்மலைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். 


சங்கராபுரம் பூட்டை சாலையில், பைக்கில் வந்த திருநாவுக்கரசை திடீரென்று மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. இதைக் கண்டு திடுக்கிட்டு, டூவீலரை நிறுத்தியுள்ளார் திருநாவுக்கரசு. அப்போது அந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து, திருநாவுக்கரசு கழுத்தில் ரத்தக் கோடு போட்டனர். 


பின்னர், அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின், மொபைல் ஃபோன், பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதையடுத்து திருநாவுக்கரசு, சங்கராபுரம் காவல் நிலையத்தில், தன்னை வழிமறித்துக் கொள்ளையடித்த கும்பல் குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். 


அப்போது பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் பதில் முன்னுக்குப் பின்னாக இருக்கவே, அவர்களை காவல் நிலையம் கொண்டுசென்று மேல் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நெடுமானுர் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவச்சந்திரன் (25), ஜெய்சங்கர் மகன் சதீஷ்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.  

 

திருநாவுக்கரசை தாக்கி செயின் பணம் பறித்ததை மூவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 சவரன் நகை, 1,000 ரூபாய் பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பைக் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்கள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்