/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died_20.jpg)
விழுப்புரம் நகரின் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த பல ஆண்டுகளாக சலவைத் தொழில் செய்துவருகிறார். இவர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி பெட்டி வைத்து துணிகளைத் தேய்த்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவருகிறார். வழக்கம்போல் நேற்று (16.12.2021) காலை ஆறு மணி அளவில் அவர் நிறுத்தி வைத்திருந்த தள்ளுவண்டியில் துணிகளை எடுத்துக்கொண்டு சேர்ப்பதற்காக சென்ற அவர், அதிர்ச்சியடைந்தார்.
காரணம், அவரது தள்ளுவண்டியில் நான்கு வயதுள்ள சிறுவனின் உடல் இறந்த நிலையில் துண்டால் சுற்றிவைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். சிறுவன் கிடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் இறந்த நிலையில் கிடந்த சிறுவன் யார்? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. நீல நிற டி-ஷர்ட்டும் வெள்ளை நிற ட்ரவுசரும்அணிந்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர். அச்சிறுவனின் இறந்த உடலை இஸ்திரி பெட்டி தள்ளுவண்டியில் கொண்டுவந்து போட்டது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். சிறுவனின் சடலம் தள்ளுவண்டியில் கிடந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)