
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் உள்ள பிரதான சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மற்றும் பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீலகிரியின் பைன் பாரஸ்ட் பகுதிக்கு வந்த சிறுவன் ஒருவர் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த 16 வயது மதிக்கத்தக்க ஆதி தேவ் என்ற சிறுவன் எட்டாவது மைல் பகுதியில் இருக்கும் பைன் பாரஸ்ட் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ஆதி தேவ் உயிரிழந்தான். உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.