Boy dies in Kadapa stone collapse; A life lost due to negligence

விருதுநகரில் கடப்பா கல் ஏற்றி வந்த மினி லாரி, பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில் மினி லாரியில் பயணித்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிச்சாமி. இவர் கட்டுமான பணிகளுக்காக ஏழாயிரம் பண்ணை பகுதிக்குச் சென்று கடப்பா கல், சிங் தொட்டி, சிமெண்ட் மூட்டை ஆகியவற்றை லோடு ஆட்டோவில் வாங்கி வந்துள்ளார். இதற்காக செல்லும் பொழுது தன்னுடைய மகன்களான கபிலன் ஆர்யா, விஜயதர்ஷன் (4) ஆகிய இரண்டு சிறார்களையும் உடன்அழைத்துச் சென்றுள்ளார்.

மினி லாரியில் ஒரு பக்கத்தில் கடப்பா கல், சிங் தொட்டி, சிமெண்ட் மூட்டை ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டு விஜயதர்ஷன் உள்ளிட்ட இரண்டு சிறுவர்களையும் அமர வைத்து மினி லோடு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது திடீரென பேருந்தின் பின்பக்கத்தில் லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisment

லோடு வேன் மோதிய வேகத்தில் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நான்கு வயது சிறுவன் விஜய்தர்ஷன் உயிரிழந்துள்ளார். 4 வயது பிஞ்சு குழந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.