
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கு பாலன். இவரது மகன் மணிகண்டன் (வயது 16). இவர் அதே கிராமத்திலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். இவர் நேற்று (16.06.2021) காலை, கிராமத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கிடந்த பெரிய கற்களின் மீது அமர்ந்து தன்னை மறந்து செல்ஃபோனில் வீடியோ காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த கற்களின் இடையிலிருந்து 3 அடி நீளம் கொண்ட விஷப்பாம்புகள் இரண்டு ஊர்ந்து வந்து சிறுவன் மணிகண்டனின் காலைச் சுற்றிகொண்டு பின்னர் கடித்துள்ளன.
அதன் பிறகு வீடியோ காட்சி பார்த்துக்கொண்டிருந்த அவரது கவனம் கலைந்தது. பின்னர் காலில் என்ன கடித்தது என்று பார்த்தபோது பாம்பு இரண்டு சுற்றிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காலை உதறியவுடன் ஒரு பாம்பு ஓடிவிட்டது. உடனே சத்தம் போட்டு அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக ஊர் இளைஞர்கள் மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். அந்த நேரத்திலும் அந்தச் சிறுவன் தன்னைக் கடித்த பாம்புகளில் ஒன்றை உயிருடன் கையில் பிடித்து, அதை ஒரு பையில் போட்டுக்கொண்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள்,சிறுவன் மணிகண்டன் தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததைக் கண்டு வியப்படைந்தனர். உடனடியாக அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து விஷமுறிவு ஊசி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்றுவருகிறார். தன்னைக் கடித்த பாம்பைத் துணிச்சலுடன் பிடித்துப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்த அந்தச் சிறுவனின் துணிச்சலைக் கண்டு மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் வியப்படைந்தனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இளைஞர்கள் பலரும் தங்கள் கையில் ஆண்ட்ராய்டு செல்ஃபோனை வைத்துக்கொண்டு அதன்மூலம் வீடியோ காட்சிகள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைப் பார்ப்பது, அதில் வரும் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது, சிலர் செல்ஃபோனில் திரைப்படம் பார்ப்பதுஎன அதிகப்படியான நேரத்தை அந்த செல்ஃபோனிலேயே கழிக்கின்றனர். அவ்வாறு இருக்கையில் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி சிறிதளவு கூட உணர்வு இல்லாமல் தங்களை மறந்து செல்ஃபோனில் மூழ்கியுள்ளதால், ஊர்ந்து வந்த பாம்பு காலைச் சுற்றிக்கொண்டு கடித்ததைக் கூட மணிகண்டன் கவனிக்கவில்லை.இதன்மூலம் எந்த அளவுக்குத் தங்களை மறந்து சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் செல்ஃபோனில் மூழ்கியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)