Skip to main content

காருக்குள் அழுகிய நிலையில் சிறுவன் சடலம்; கொலையா? - நீடிக்கும் மர்மம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Boy body rotting inside car in Salem

 

சேலத்தில், காருக்குள் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன், கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    

 

சேலம் அம்மாபேட்டை ரஷ்யா காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர், குமரகிரி புறவழிச்சாலையில் கார் பழுதுபார்ப்பு பட்டறை வைத்திருக்கிறார். உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சில நாள்களாக பட்டறைக்கு விடுமுறை விட்டிருந்தார். பின்னர், மே 27 ஆம் தேதி பட்டறையை மீண்டும் திறந்தபோது அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. காரை திறந்து பார்த்தபோது, 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தான். இதுகுறித்து அவர் அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறைக்கு தகவல் அளித்தார். சடலம் அழுகியிருந்ததால் அந்தப் பட்டறையில் வைத்தே சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர்.     

 

காவல்துறை விசாரணையில், காருக்குள் சடலமாகக் கிடந்த சிறுவன் ரஷ்யா காலனியைச் சேர்ந்த சுகன்யா என்பவருடைய மகன் சிலம்பரசன் (7)  என்பது தெரிய வந்தது. சடலம் கிடந்த கார், மாணிக்கத்தின் பட்டறையில் 4 மாதத்திற்கு முன்பு பழுது பார்ப்புக்காக வந்துள்ளது. அந்த காருக்குள் சிறுவன் இறந்து கிடந்ததால் அவனுடைய மரணத்தில் மர்மம் நீடித்தது. யாராவது அவனை கொலை செய்துவிட்டு, அங்கு  மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் பட்டறையின் உரிமையாளர் மற்றும் சிறுவனின் தாயாரிடமும் தீவிர  விசாரணை நடந்தது. சுகன்யாவுக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன்பு காரிப்பட்டி அருகே உள்ள கோலாத்துக்கோம்பையைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மூலமாக சிலம்பரசன் என்ற மகனும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

 

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா அவரைப் பிரிந்து வசித்து வந்தார். இந்நிலையில், ரஷ்யா காலனியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். தனது மகனையும் தன்னுடன் வைத்துக் கொண்டார்.  சிறுவன் சிலம்பரசனை சுகன்யாவின் உறவினர்கள் அடிக்கடி கோலாத்துக்கோம்பைக்கு அழைத்துச் செல்வார்கள். இந்நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவன் திடீரென்று காணாமல் போனான். ஒருவேளை, அவனை உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதிய சுகன்யா, அவனை தேடாமல் இருந்துவிட்டார்.

 

இப்படியான நிலையில்தான் சிலம்பரசனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பட்டறை உரிமையாளர் மாணிக்கம் தனது பட்டறைக்கு விடுமுறை விடப்பட்டு  இருந்தபோது அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பழுதடைந்த காருக்குள் விளையாட்டாக ஏறி இருக்கிறான். காருக்குள் சென்ற சிறுவன் கதவை சாத்தியபோது அதை மீண்டும் திறக்க முடியாத அளவுக்கு பூட்டிக் கொண்டிருக்கிறது. கார் கதவை திறக்க முடியாததால் மூச்சுத்திணறி சிறுவன் இறந்திருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  எனினும், உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே சிறுவனின் சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாபேட்டை ரஷ்யா காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்