Advertisment

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உட்பட 4 பேர் கைது!

Boy abducted at Dharmapuri Government Hospital 4 arrested including 3 women!

Advertisment

தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைக் கடத்தியதாக மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சு வேலை செய்பவர். இவருடைய மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ஆம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு அடுத்த நாள் காலையில் மாலினி, பிரசவ அறை அருகே உள்ள கழிப்பறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து பார்த்தபோது, தன்னுடைய குழந்தை திடீரென்று மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

அடுத்த சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகமே பரபரப்பு அடைந்தது.இதுகுறித்து மாலினி அளித்த புகாரின்பேரில் தர்மபுரி நகர டிஎஸ்பி அண்ணாத்துரை, நகர காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். மற்றொருபுறம், மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாக சட்டசபை கூடியுள்ள நேரத்தில், இந்த விவகாரம் சர்ச்சையாகிவிடும் என்பதால் குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, மாலினியின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியல் நடத்த முயன்றனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். இளஞ்சிவப்பு நிறத்தில் நைட்டி உடை அணிந்த ஒரு பெண், மாலினியின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பிரசவ வார்டில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

தர்மபுரி நகரில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்தபோது, அந்த மர்மப்பெண் ஒரு ஆணுடன் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, குழந்தையைத் தூக்கிச் செல்வதும், ஓரிடத்தில் ஆட்டோவில் ஏறிச்செல்வதும் தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, அந்த மர்மப்பெண் உருது மொழியில் பேசியதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையே அந்த மர்மப்பெண், இண்டூரில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள இண்டூருக்கு விரைந்தனர்.

Boy abducted at Dharmapuri Government Hospital 4 arrested including 3 women!

அங்கே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கடத்தப்பட்ட ஆண் குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் குழந்தையைக் கடத்திய மர்மப் பெண், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வட சந்தையூரைச் சேர்ந்த தன்ஷியா (20) என்பதும், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது அவருடைய கணவரான ஜான்பாஷா (24) என்பதும் தெரிய வந்தது.

பிடிபட்ட மற்ற இரு பெண்களில் ஒருவர் தன்ஷியாவின் தாயார் ரேஷ்மா (41) என்பதும், மற்றொருவர் தன்ஷியாவின் பாட்டி பேகம்பீ (63) என்பதும் தெரியவந்தது.

இவர்களிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜான்பாஷா, வீடுகளில் ஃபால்ஸ் சீலிங் அமைக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் வீட்டில் இருந்துவருகிறார். அவருக்கும், தன்ஷியாவுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தன்ஷியா, ஒருமுறை கர்ப்பமடைந்துள்ளார். 6 மாத குழந்தை வயிற்றில் இருந்தபோது கருக்கலைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது முதல் அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் குழந்தை இல்லாதது குறித்து தன்ஷியாவை குத்தலாக பேசிவந்துள்ளனர். அதற்கு அடுத்து இரண்டுமுறை மாதவிலக்கு தள்ளிச் சென்றபோதும் கூட கரு தங்குவதில் பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில்தான், எங்கேயாவது, எந்த வழியிலாவது ஒரு குழந்தையைத் திருடியோ அல்லது விலைக்கு வாங்கி வந்தாவது வளர்க்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். அதேநேரம், தானே கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்ததுபோல இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, கடந்த மாதம் தன்ஷியாவுக்கு வீட்டிலேயே வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். அதன் பிறகு, குழந்தை கடத்தல் சம்பவம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் நிறைமாத கர்ப்பிணி என்று கூறி சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் தன்ஷியா.

மருத்துவர்கள், செவிலியர்கள் வரும்போது அவர்களுக்குப் போக்குக்காட்டிவிட்டு அங்கேயே பதுங்கி இருந்துள்ளார். அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதுபோல அவ்வப்போது தன்ஷியாவின் தாயாரும், பாட்டியும், கணவரும் மகப்பேறு பிரிவுக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில்தான் மாலினிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாலினி குழந்தையை விட்டு எப்போது நீங்கிச் செல்வார் என்று நோட்டம் பார்த்துக்கொண்டே இருந்த தன்ஷியா, அவர் கழிப்பறைக்குச் சென்ற நேரம் பார்த்து குழந்தையைத் துணியால் சுற்றி மார்போடு அணைத்தபடி கடத்திச்சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், குழந்தையைக்கடத்திச் செல்லும்போது அவரிடம் மகப்பேறு பிரிவு அருகே பணியில் இருந்த செக்யூரிட்டி ஒருவர் விசாரித்துள்ளார். அதற்கு தன்ஷியா, “குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தூக்கி வரச் சொன்னார்கள். அதனால் குழந்தையைக் கொண்டு செல்கிறேன்” என்று லாவகமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை கடத்தல் கும்பலின் படங்களைக் காவல்துறையினர் ஏனோ ஊடகங்களின் பார்வைக்கு காட்டாமலேயே ரகசியமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கருவுறாத பெண் ஒருவர்எப்படி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்? நான்கு நாட்களாக மகப்பேறு வார்டில் படுக்கையில் உள்நோயாளியாக இருந்தும் அவருக்கு எந்த ஒரு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளிக்கவில்லையா? அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண பதிவேடுகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே மருத்துவமனை தரப்பில் இல்லாததும் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

உண்மையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் மேற்குறிப்பிட்ட நான்கு பேர் மட்டும்தான் இருக்கிறார்களா? அல்லது மருத்துவமனை தரப்பிலேயே யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

எனினும், கடத்தல் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாக குழந்தையைப் பத்திரமாக மீட்ட தர்மபுரி நகரக் காவல்துறையினரைக் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

dharmapuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe