
காஞ்சிபுரம் அடுத்துள்ள முக்கூடல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (74). இவருக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவி இறந்துவிட்டதால், அவரது மகன் ஸ்ரீராம் தனது தந்தையை வைத்து சரியான முறையில் பராமரிக்கவில்லை. அதனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் தனது இரண்டாவது மனைவி குமாரி (68), அவரது மகள் வனிதா (39) ஆகியோரை தேடி வந்துள்ளார் வரதராஜன்.
அப்போது இரண்டாவது மனைவியும் மகளும் பாசத்துடன் வரவேற்று அவருக்குத் தேவையான அனைத்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களோடு வைத்துக் பராமரிப்பு செய்து பாதுகாத்துவந்தனர். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை குன்றிய வரதராஜ் நேற்று (06.06.2021) மாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் முக்கூடலில் இருந்த முதல் மனைவியின் மகனான ஸ்ரீராம் என்பவற்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஸ்ரீராம் தனது ஊரிலிருந்து உறவினர்கள் பத்து பேருடன் நேற்று மதியம் பனையபுரம் வந்துள்ளார்.
அங்கு வந்த ஸ்ரீராம் தனது தந்தையின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளார். தந்தை உயிரோடு இருக்கும்போது அவரை உரிய முறையில் பாதுகாக்க தவறியதால், அவர் எங்களைத் தேடி வந்ததனால் நாங்கள் நல்லமுறையில் கவனித்துப் பாதுகாத்துவந்தோம். தற்போது உடல்நிலை காரணமாக இறந்துபோனார். அதனால் அவரது உடலை தர முடியாது நாங்களே அடக்கம் செய்துகொள்ளப் போகிறோம் என வனிதா கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி, காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிநாதன் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று வனிதா, ஸ்ரீராம் ஆகிய இருவருக்குமிடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி மற்றும் காவல்துறையினர் ஆலோசனையின்படி உயிரிழந்த வரதராஜ் உடலை பனையபுரத்திலேயே அடக்கம் செய்வது எனவும் அவரது இறுதிச்சடங்கில் மகன் என்ற முறையில் ஸ்ரீராம் இறுதிச் சடங்குகள் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட வரதராஜனின் மகன் ஸ்ரீராம், சமாதானமாகி இறுதிச் சடங்குகளை செய்து, அவரது உடலை அன்று இரவு 8 மணியளவில் பனையபுரத்தில் அடக்கம் செய்தனர்.