
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டன. அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனமும் இறங்கியுள்ளது.
இந்தியாவில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. 'பாரத் கோவாக்சின்' என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு, இது விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்த மருந்தை சில நாட்களுக்கு முன் மூன்று நபர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட முயற்சியாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கரோனா தடுப்பூசி கோவாக்சினை தன்னார்வலர்களுக்கு இன்று செலுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல். என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்கள் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்ட இரண்டு தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவாக்சின் மருந்தின் செயல்பாடு மூன்று மாதத்தில் முழுமையாகத் தெரியவரும் என்றும், பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் விரைவில் கோவாக்சின் பயன்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் எஸ்.ஆர்.எம். பல்கலை துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.