
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ரிக் (போர்வெல் லாரி) உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று (04.03.2021) துவங்கிய இந்த வேலை நிறுத்தப் போராட்டம், வரும் 7ஆம் தேதி வரை நடைபெறும் என போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மேலும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து அவர்கள், “போர்வெல் இயக்குவதற்குத் தேவைப்படும் டீசல் விலை உயர்வு, பி.வி.சி. பைப்புகள் 70% விலை உயர்வு, உதிரி பாகங்கள் மற்றும் பிட் ஆகியவற்றின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டும் இருக்கிறது. இதனைக் கண்டித்தும், இந்த விலையேற்றத்திற்கு ஏற்ப, போர்வெல் உரிமையாளர்கள் புதிய ட்ரில்லிங் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளோம் அதனைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்று தெரிவித்தனர்.
திருச்சி மன்னார்புரம் மதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள கல்குவாரி மைதானத்தில், திருச்சி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, விராலிமலை, மணப்பாறை, கீரனூர், புள்ளம்பாடி, டால்மியாபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த போர்வெல் உரிமையாளர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.