Skip to main content

நெஞ்சுரம் மிக்க பத்திரிக்கை நக்கீரன்! -கவிக்கோ நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் சிற்பி!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
nakkheeran book stall



சென்னையில் நடைபெறும் 42 ஆவது புத்தகத் திருவிழாவில் நக்கீரன் நூல் அரங்கில் திருவள்ளுவர் தினத்தன்று மாலை, கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ’நிலவுக் கிண்ணத்தில் மது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. இவ்விழாவிலேயே அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் இரு நூல்களும் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன. 
 

நக்கீரன் பொதுமேலாளரான சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்க, கலைவிமர்சகர் இந்திரன் முன்னிலை வகிக்க, கவிஞர் ஜெயபாஸ்கரன்  நிகழ்சிக்குத் தலைமை தாங்கினார்.  
 

ஆரூர் தமிழ்நாடனால் தொகுக்கப்பட்ட கவிக்கோ அப்துல்ரகுமானின் இறுதிக் காலக் கவிதைகள் அடங்கிய ‘இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது’, பிரபஞ்சன் எழுதிய  ’மனு அதர்மம்’ , ’கழுதைக்கு அஞ்சுகால்’ ஆகிய மூன்று நூல்களையும் கவிவேந்தர் மு.மேத்தா வெளியிட்டார். அவற்றை வானம்பாடிக் கவிஞர் சிற்பி பெற்றுக்கொண்டார். 
 

இவற்றில் பிரபஞ்சனின் இரண்டு நூல்களும், நக்கீரனில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்களாக வெளிவந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற படைப்புகளாகும். இவற்றை கவிஞர் ஜலாலுதீன் வெளியிட முனைவர் ஆதிரா முல்லை பெற்றுக்கொண்டார்.
 

nakkheeran book stall


 

 தலைமையுரை ஆற்றிய கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘மறைந்த எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துக்களால் வாழ்கிறார்கள். அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நூல்களை நக்கீரன் வெளியிடுவது பெருமைக்குரியது. அதிலும் கவிக்கோ  அப்துல்ரகுமானோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் முன்னிலையில், அவருடைய கவிதை நூல் வெளியிடப்படுவது தற்செயலாக அமைந்த பெரும் வாய்ப்பாகும்’ என்றார் நெகிழ்ச்சியாய்.
 

நூல்களை வெளியிட்டுப் பேசிய மு.மேத்தா ‘மறைந்தாலும் எழுத்தாளன் அவன் எழுத்துக்களால் வாழ்கிறான். கவிக்கோ அவர்கள் இறுதி நாட்களில் எழுதிய கவிதைகள், நூல்வடிவம் பெறுவது மகிழ்வைத் தருகிறது. அந்தஅந்த வேலையை நக்கீரன் செய்வது பெருமைக்குரியது என்றார் பெருமிதமாக.
 

வானம்பாடிக் கவிஞர் சிற்பியோ ‘கவிக்கோ அப்துரகுமானின் நினைவுகள் என் மனதிலே வந்து என்னை நெகிழவைக்கின்றன. அவர் காதலிலும் தத்துவத்திலும் கொடிகட்டிப் பறந்தார். அவரது எந்தக்கவிதையை எடுத்தாலும் அதில் இந்த இரண்டு கூறுகளும் இருக்கும். அவருடன் பழகிய நாட்கள் மனதில் நின்று நிலைத்த நினைவுகளாகும். அவர் மறைந்த பிறகும், அவரது கவிதைகளைத் தேடிப் பிடித்துத் தொகுத்துத் தந்திருக்கும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடனைப் பாராட்டுகிறேன். இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன்தான். மிகவும் நெஞ்சுரம் கொண்ட தைரியமான பத்திரிகை என்றாலும் அது நக்கீரன்தான். இன்று கருத்துரிமைக்காக நக்கீரன் தொடர்ந்து குரல்கொடுத்துக் கொண்டிருப்ப்பதைப் பார்க்கிறோம்.  கருத்துரிமையின் அடையாளமாகத் திகழும் நக்கீரன், தமிழ்க் கவிதையின் அடையாளமாகத் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை நூலை வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரியது’ என்றார் அழுத்தமாய்.  

 

nakkheeran book stall


 

நன்றியுரை ஆற்றிய ஆரூர் தமிழ்நாடன் ‘கவிக்கோ அவர்களின் கடைசிக் காலத்தில் அவரோடு  நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றதை என் வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன். அவரை கடைசியாக கவிஞர்கள் ஜலாலுதீன், ஜெயபாஸ்கரன் ஆகியோரோடு மருத்துவமனையில் பார்த்தபோது, எங்களை புன்னகையோடு வரவேற்றார். அவரிடம் ஜெயபாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நீங்கள்தான் தலைமை தாங்கவேண்டும். நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அழைத்தேன். அந்த ஆசை பொய்த்துவிட்டது. அவர் பதில் சொல்லாமல் புன்னகைத்தார். அவர் தன் மரணத்தை உணர்ந்து வைத்திருக்கிறார் என்ற உண்மை பின்னர்தான் புரிந்தது. அவர் இல்லாத நிலையில் அவருடைய கவிதைநூல் வெளியாகிற இந்த நிகழ்சியில், அவருடைய நெஞ்சுக்கு நெருக்க்கமானவர்கள் பலரும் கலந்துகொண்டிருப்பது  மகிழ்சிக்குரியதாகும். கவிக்கோவின் இன்னொரு தத்துவக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு நக்கீரனில் தயாராகிக்கொண்டிருக்கிறது.  அது விரைவில் வெளிவரும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில், இலக்கிய ஆளுமைகளான பிருந்தாசாரதி, முனைவர் ஆதிரா முல்லை, ஃபைஸ் காதிரி, உஸ்மான், கவிஞர் மீனா சுந்தர், இலக்கியன், லக்சு, சூர்யா, கவிக்குழல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

மகிழ்வும் நெகிழ்வும் கலந்த கலவை நிகழ்ச்சியாய் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.