/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaccinated33333.jpg)
தீபாவளியையொட்டி, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23/10/2021) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (23/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளைச்சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020- 2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிடத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்- 19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்- 19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைகள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூபாய் 21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூபாய் 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2020- 2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள மற்றும் நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெறத்தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூபாய் 8,400 பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)