
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ தற்போது பிரிட்டன் நாட்டிற்கு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாம்பே ஜெயஸ்ரீக்கு தற்போது உடல் நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பே ஜெயஸ்ரீ 2 நாட்கள் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ 120க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய 'வசீகரா...' (மின்னலே), 'மலர்களே மலர்களே...' (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்), 'ஒன்றா ரெண்டா...(காக்க காக்க), ''யாரோ மனதிலே...' (தாம் தூம்) உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.