Bomb in Tiffin Box; incident in villivakkam

அண்மையில் கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தில் வெடிகுண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், டிபன் பாக்ஸில் வெடிகுண்டை கொண்டு வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோல் சென்னையிலும் டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர்கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியுடன் சுற்றிவந்து அச்சுறுத்தல் கொடுப்பதாக சென்னை வில்லிவாக்கம் காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் பொதுமக்கள் தொலைப்பேசி மூலமாகப் புகார் ஒன்று கொடுத்திருந்தனர். அதனடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார்கார்த்திக் என்ற நபரைப் பிடித்தனர். அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டிலிருந்த டிபன் பாக்ஸ் ஒன்றை போலீசார் திறந்து பார்க்க முயன்றனர். அப்பொழுது கார்த்திக் அதில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாகத்தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் பதறியதை வைத்து கார்த்திக் போலீசார் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் அதே வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு டிபன் பாக்ஸ்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (27) மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில்உள்ளது தெரியவந்தது. எதிரிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி வில்லிவாக்கம் பகுதியில் தங்கி வந்துள்ளார். எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து வெடிகுண்டு நிபுணர்களை வைத்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Advertisment