ADVERTISEMENT

சேலம் நட்சத்திர விடுதிகள், தலைமைச் செயலகத்திற்கு குண்டு மிரட்டல்... பெங்களூரு தொழில் அதிபர் சிக்கினார்! பரபரப்பு தகவல்கள்!! 

10:48 AM Aug 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் உள்ள முன்னணி நட்சத்திர விடுதிகள், கேரள மாநில தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கார், லேப்டாப், செல்ஃபோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே சிஜே பல்லாஸியோ என்ற பெயரில் தனியார் நட்சத்திர விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு, மர்ம நபரிடமிருந்து செல்ஃபோன் மூலம் ஒரு மிரட்டல் வந்தது. செல்ஃபோனில் பேசிய மர்ம நபர், அந்த விடுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விடுதியின் உரிமையாளர் கல்கி சுந்தரம் ராமநாதன் தன்னை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், தன்னைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்திருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து நிர்வாகத்தினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து விடுதியின் இயக்குநர் பிரேம்நாத் என்பவர், ஆக. 8ஆம் தேதி இரவு, சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குண்டு மிரட்டல் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66 எப் (1) (பி) மற்றும் இதர பிரிவுகள் 506 (2), 507 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சேலம் மாநகரக் காவல்துறை துணை ஆணையர்கள், சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் ஆகியோர் கொண்ட விரிவான தனிப்படை அமைத்து மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

உடனடியாக சிஜே பல்லாஸியோ விடுதியில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அங்கு வெடிக்கும் வகையிலான எந்தப் பொருளும் இல்லை என்பது தெரியவந்தது. இது ஒருபுறம் இருக்க, மாமாங்கத்தில் உள்ள கிராண்டு எஸ்டான்சியா என்ற நட்சத்திர விடுதிக்கும், நான்கு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரின் செல்ஃபோனுக்கும் மர்ம நபர் குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கேரள மாநில தலைமைச் செயலகத்திலும் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக கிராண்ட் எஸ்டான்சியா நட்சத்திர விடுதியின் மனிதவளத்துறை அலுவலர் பிரசாத் என்பவரும், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

இதனால் தனிப்படையினர் விசாரணையில் மேலும் தீவிரம் காட்டினர். இதில், சேலத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள், கோவை மாவட்ட ஆட்சியர், கேரள தலைமைச் செயலகம் ஆகியவற்றுக்கு மிரட்டல் விடுத்தது ஒரே நபர்தான் என்பது தெரியவந்தது. எல்லா மிரட்டல்களுமே சேலத்தில் இருந்துதான் சென்றுள்ளது. மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன் எண்ணை ஆய்வு செய்தபோது, அந்த எண் சேலத்தை அடுத்த சித்தனூரில் தேநீர் கடை நடத்திவரும் ராணி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, அந்த எண்ணுக்குரிய செல்ஃபோன், கடந்த 5ஆம் தேதியன்று தொலைந்துவிட்டதாகவும், தன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திருடியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரும்பாலை காவல் நிலையத்தில் ராணி ஏற்கனவே புகாரும் அளித்துள்ளார்.

மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன் எண்ணுக்கு, சேலம் ரயில் நிலையம் அருகில் உள்ள செல்ஃபோன் ரீசார்ஜ் கடையில் இருந்துதான் கடைசியாக ரீசார்ஜ் செய்திருப்பதை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம்தான் மிரட்டல் ஆசாமியைக் கண்டுபிடிக்க திருப்புமுனையாக அமைந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒருவர் மீது சந்தேகம் வலுத்தது. சந்தேகத்தின்பேரில் மர்ம நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அந்த மர்ம நபர், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலஹங்காவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கார்டன் பகுதியைச் சேர்ந்த நடராஜன் நாயர் மகன் பிரேம்நாத் நாயர் (43) என்பதும், அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர்தான் சித்தனூரில் ராணி நடத்திவரும் தேநீர் கடைக்கு வந்த, அங்கிருந்த ராணியின் செல்ஃபோனை திருடிச்சென்று, அதன்மூலம் மிரட்டல் விடுத்திருப்பதையும் உறுதி செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த நேரத்தில் பிரேம்நாத் நாயர், மிரட்டல் விடுக்கப்பட்ட கிராண்டு எஸ்டான்சியா நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்துள்ளார் என்கிறார்கள் காவல்துறையினர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, “இந்த வழக்கில் பிடிபட்டுள்ள பிரேம்நாத் நாயர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். அவர் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட சில தொழில்களைச் செய்துவந்ததாகவும், கரோனா ஊரடங்கு காலத்தில் தன் தொழிலில் 5 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்ததால் அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி 5 கோடி ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தகாவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனாலும் அவர் என்னென்ன தொழில் செய்துவந்தார் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு விமானப்படையில் பணியாற்றியதாகவும் கூட கூறினார். அவர் சொல்லும் தகவல்கள் உண்மையானதுதானா என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர். பிடிபட்ட பிரேம்நாத் நாயரிடம் இருந்து ஒரு கார், லேப்டாப், இரண்டு செல்ஃபோன் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT