Bomb threat to Edappadi Palaniswami's house

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மதியம் 2.30 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டது தெரிந்தது.

உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது. எடப்பாடி பழனிசாமி வீடு மட்டுமல்லாது இன்னும் சிலருக்கும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதும்தெரியவந்துள்ளது.

Advertisment

சமீபமாகவே புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. குறிப்பாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை; புதுச்சேரி முதல்வர் இல்லம் ஆகியவற்றில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வெளியாகி இருந்தது. ஆனால் சோதனையில் அவை போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. அதேபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதுவும் போலியானது என்பது தெரியவந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டல் தகவல் போலி என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.