Advertisment

துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் – நல்ல சமயம்; நழுவ விடக்கூடாது: மு.க.ஸ்டாலின்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உளப்பூர்வ எண்ணமும் - உறுதியும் முதல்வருக்கு இருந்தால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் – நல்ல சமயம்; நழுவ விடக்கூடாது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட மறுத்து விட்டது மத்திய பாஜக அரசு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, ஆந்திர மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களையும் ராஜினாமா செய்யவைத்து, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தே விலகி விட்டார் மாண்புமிகு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள். மாநில அரசுகளின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தின்படி பொதுப்பட்டியலில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களையும் கூட ஆக்கிரமித்துக் கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின், "பெரியண்ணன்" போக்கைக் கண்டித்து ஒரு மாநில முதலமைச்சராக திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவினை மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்துப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது.

முதலில், தனி திராவிட நாடு கோரிய நாம், அதனைக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டபோது, அதனை கைவிட்டோம். பேரறிஞர் அண்ணா அவர்கள், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டாலும், அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன”, என்று அறிவித்தார். அதனடிப்படையிலேதான், அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்தே, திமுகழகம் மாநில சுயாட்சி முழக்கத்தை இன்றளவும் முன்னெடுத்து வருகிறது.

Stalin

Advertisment

நெருக்கடியான இந்த நிலை, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கும் முற்றிலும் பொருந்தும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து, மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்து, "நீட்" தேர்வை அவசர அவசரமாகக் கொண்டு வந்து தமிழகத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல், சட்டமன்ற மாண்பையும் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது.

தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், இந்தியாவின் மாட்சிமை மிக்க உச்ச நீதிமன்றத்தையே மத்திய அரசு மதிக்கத் தவறி, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை, கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து, வேண்டுமென்றே தாமதித்து விடாப்பிடியாக மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தே, "காலக்கெடுவிற்குள் அமைக்க முடியாது", "சீராய்வு மனுத்தாக்கல் செய்யலாம்". "காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை", என்று சொல்லி, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோரை விட்டு பேச வைப்பதோடு மட்டுமின்றி, காவிரிப் பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடக மாநில அரசை சீராய்வு மனுத்தாக்கல் செய்யத் தூண்டி விடும் செயலையும் மத்தியில் உள்ள அரசு செய்கிறது.

தமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ, அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்கவில்லை. ஏன், காவிரி பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரைக் கூட சந்திக்கவில்லை. ஜனநாயக நெறிமுறைகள் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. கர்நாடகத் தேர்தல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு காவிரி உரிமையை காலில் போட்டு மிதித்துக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடைசி வாய்ப்பாக, இப்போது தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளது.

மக்களவையில் தி.மு.க. இடம்பெற்றிருந்தால், “தீர்மானத்துக்கு ஆதரவளிப்போம்”, என்று அடுத்த நொடியே அறிவித்திருப்போம். ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதாக கூறிவரும் அதிமுக, காவிரி மற்றும் நீட் பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, “மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம்”, என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக அறிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தைத் தரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் ஆறுவார காலத்திற்குள் அமையவேண்டும் என்று உண்மையிலேயே உளப்பூர்வமான எண்ணமும், உறுதியும் முதலமைச்சருக்கு இருக்குமானால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுத்து உடனடியாக அறிவிக்கவேண்டும். நல்ல சமயம் இது. நழுவவிடக் கூடாது! இவ்வாறு கூறியுள்ளார்.

mk stalin Do not miss good time Boldly decide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe