The body thrown in the sewer... the police are unable to identify it!

ஈரோட்டில் மர்மமான நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு மேலாகியும் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த தகவல் கிடைக்காமல் போலீசார்திணறி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மோளகவுண்டம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள ஒரு சாக்கடையில் சென்ற மாதம் 30-ந் தேதி இரவு பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு அதன் மேல் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டவர் வெளியிடத்தில் கொலை செய்து கொண்டு வந்து சடலத்தை சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அதிகாலை நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவர் சடலத்தை பெட்ஷீட்டில் கட்டி தலையில் வைத்து கொண்டு வரும் காட்சி பதிவாகி இருந்தது.

Advertisment

இதையடுத்து கொலையாளிகள் மற்றும் கொலையான நபர் குறித்து அடையாளம் காண்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். கொலையானவருக்கு 45 வயது வரை இருக்கும். அவர் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் போன்று இருந்தார். அவரது வலது கையில் லலிதா என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இடது கையில் காளி படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இடது கையில் இரும்பு காப்பும் அணிந்திருந்தார். இந்த அங்க அடையாளகள் வைத்து போலீசார் கொலையானவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமல் போனவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. எனினும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சம்பவம் நடைபெற்று 15 நாட்கள் ஆகியும் இவ்வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடி வரும் அதே நேரத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றச் செயல்களும் கூடி வருவதை தமிழக போலீசார் ஆய்ந்து கவனித்து நடவடிக்கையில் இறங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisment