
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாணவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையிலேயே உடற்கூராய்வு முடிந்தது. நேற்று முன்தினமே மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் உடலை ஒப்படைப்பது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் துவங்கியது.இரண்டாவது முறை உடற்கூராய்வு செய்தபோதும் புதியதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.அதேவேளை நடந்த உடற்கூராய்வில் திருப்தி இல்லை என மாணவியின் பெற்றோர் தரப்பு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து 'நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா?' என மாணவியின் பெற்றோர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஷ்குமார், செய்யப்பட்ட இரண்டு உடற்கூராய்வுகளின் அறிக்கைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு செய்யவும், பிரேத பரிசோதனையின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை ஜிப்மர் மருத்துவமனையிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த நிலையில், நாளை 7 மணிக்குள் உடலை பெற்று, நாளை மாலைக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பெற்றோர் தரப்புக்குஉத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)