/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_62.jpg)
கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள கருணாபுரம் எனும் பகுதியைச் சேர்ந்த 15 வயதான வரதராஜன், ராஜ்குமார் மற்றும் அஸ்வந்த் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள், கடந்த 4ஆம் தேதி காலை நகரை ஒட்டி ஓடும் கோமுகி ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்வதற்காக முயன்றுள்ளனர்.
அப்போது மூவரும் தவறி விழுந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் வரதராஜன், ராஜ்குமார் ஆகிய இருவரும் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். ராஜ்குமார் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால், வரதராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் அஸ்வந்த்தை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா, காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அஸ்வந்தை கண்டுபிடிப்பதற்கு, தீயணைப்புத் துறை, சமூக ஆர்வலர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி தெரிந்தவர்கள் ஈடுபடுத்த உத்தரவிட்டனர். அதோடு ட்ரோன் கேமரா மூலமும் அஸ்வந்த் என்ன ஆனார் என்பது குறித்துத் தேடும் பணி நடத்தப்பட்டது.
எட்டு நாட்களுக்குப் பிறகு சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோமுகி ஆற்றுத் தண்ணீரில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது தண்ணீரில் சடலமொன்று ஒதுங்கிக் கிடந்ததைக் கண்டுள்ளார். உடனடியாக இவர், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனே காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அதோடு அஸ்வந்தின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடல் கிடந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்குக் கிடந்த சடலத்தைப் பார்த்து இது அஸ்வந்த் உடல் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனை நடத்தினர். அதன் பிறகு அவரது உடலை அவரது உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். கோமுகி ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் எட்டு நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)