Boat sinking incident at sea; Rescue two alive!

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (26.08.2024) மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் ஒரு விசைப்படகில் கச்சத்தீவு அருகே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் அதிகப்படியான அலைகள் காரணமாக விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் சிக்கிய இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். அதாவது கச்சத்தீவு கடற்பரப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கிய இரு மீனவர்களையும் மீட்ட இலங்கை கடற்படையினர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடலில் மாயமான 2 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. முன்னதாக இன்று (27.08.2024) அதிகாலையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு படகையும் எட்டு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.