Skip to main content

மது அருந்தியவர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்... ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடிமகன்கள்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

Blood dripping from the nose of the drinker ... Shocked fellow customers involved in the argument

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையில் விற்பனையாளர்களாக ஆனந்தன், ஜெகநாதன், ஆகியோர் உள்ளனர். அந்த டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் வழக்கம்போல மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. அப்போது முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில்(32) அந்த டாஸ்மாக் கடைக்குச் சென்று 150 ரூபாய் விலை கொண்ட மது  பாட்டில் ஒன்றை வாங்கி கடைக்கு முன்பாகவே பாட்டிலைத் திறந்து குடித்துள்ளார்.

 

குடித்த சிறிது நேரத்தில் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதைப் பார்த்த அவரை சுற்றிலும் இருந்த மது அருந்துவோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் குடிப்பதை நிறுத்திவிட்டு விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘சரக்கில் கலப்படம் இருக்கிறது அதனால்தான் அதைக் குடித்த செந்தில் மூக்கிலிருந்து ரத்தம் வழிகிறது’ என்று தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த போலீஸார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்தார்.

 

அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். மூக்கில் ரத்தம் வழிந்த செந்திலை  உடனடியாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் டாஸ்மாக் கடை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் உடல்நிலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.