புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன். 2011 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். சுட்டமன்றத்தில் குறைந்த நாட்களில் அதிகமான கேள்விகளை சுருக்கமாக கேட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற பாராட்டுகளை பெற்றவர். ஒரு வருடத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் கண் கலங்க வைத்தது. பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது தொகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சாதாரண மக்களும் கதறி அழுதனர். அதன் பிறகு நெடுவாசல் மட்டுமின்றி பல கிராமங்களிலும் அவர் பெயரில் மன்றங்கள், அறக்கட்டளைகள் ஏற்படுத்தி இளைஞர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500_12.jpg)
நெடுவாசலில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் புயலில் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்ததுடன் வீட்டுக்கு வீடு தென்னை மற்றும் பல்வேறு மரக்கன்றுகளை வழங்கினார்கள். மா.சுப்பிரமணியன் நடத்தும் சைதை பசுமை இயக்கத்தில் இவர்கள் கேட்டுக் கொண்டதால் தென்னை மற்றும் மா கன்றுகளை நெடுவாசல் சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
ஏப்ரல் முதல் நாள் முத்துக்குமரன் நினைவு நாள் என்பதால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் விபத்து நடந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/502_2.jpg)
நெடுவாசல் கடைவீதியில் உள்ள முத்துக்குமரன் நினைவு விழா பொது மேடையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கிராமத்தில் இருந்து ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரத்தம் பெற்று சென்றனர். ரத்ததானம் கொடுத்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு கசாயம், நீர்மோர், வழங்கப்பட்டதுடன் பிரமாண்டமான அன்னதாமும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முத்துக்குமரன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதே போல எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் மக்கள் நலப்பணிகள் தொடந்து வழங்கப்படும் என்றனர் விழாக்குழுவினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)