
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற முனைப்போடு பயணித்து வருகிறது.
வருகின்ற மே 1ஆம் தேதி முதல், 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், கரோனா பாதிப்பு அல்லாத மற்ற நோயாளிகள் தற்போது அதிக அளவில் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் மிக முக்கியமான காரணம் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய ரத்தம் பெறுவதில் பெரிய சிக்கலை நோயாளிகள் சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு பக்கம் நோயாளிகளின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியாமல் அதனால் நோயாளிகள் இறக்கும் அவலம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ரத்தம் வழங்கக்கூடிய நபர் கரோனா தடுப்பூசி போட்டு இருந்தால் அவர் 56 நாட்கள் முடியும் வரை ரத்ததானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரத்த சேமிப்பு வங்கிகள் தங்களுடைய அராஜகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஒரு நோயாளிக்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டால் மற்ற சாதாரண நாட்களில் பெறப்படும் விலையைவிட ஐந்து மடங்கு விலை அதிகமாக நோயாளிகளிடம் இருந்து இந்த வங்கிகள் வசூலிக்கின்றனர்.
இந்நிலை தற்போது திருச்சி மாநகரில் இரத்த சேமிப்பு வங்கிகள் கையாளும் ஒரு புது யுக்தியாக மாறியுள்ளது. ஒருபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகளின் உயிரிழப்பு அதிகமாகி வரும் நிலையில் மற்றொரு பக்கம் சரியான நேரத்தில் கொடுக்கவேண்டியஇரத்தம் கொடுக்க முடியாததால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
எனவே அரசு உடனடியாக அவசர உத்தரவை இந்த இரத்த வங்கிகளுக்கு பிறப்பித்து இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி இலவசமாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)