Skip to main content

உள்ளூர் பால் விற்பனையை நிறுத்தியதால் பால் கொள்முதல் நிலையம் முற்றுகை

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Blockage of milk purchase station as local milk sale stopped.

 

கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் கொள்முதல் செய்யும் போது, உள்ளூரில் சில்லரை விற்பனை செய்ய அரசு தடை செய்திருப்பதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முற்றுகையிடப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த 48 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. கீரமங்கலத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் உள்ளூரில் வீடுகள், கடைகளுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பாலை ஆவின் கொள்முதலுக்கு அனுப்புகின்றனர். கீரமங்கத்தில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 70% வரை உள்ளூரில் விற்பனையாகிறது.

 

ஆனால், கடந்த டிசம்பர் முதல் தேதியிலிருந்து கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டுமே உள்ளூரில் விற்பனை செய்ய வேண்டும் மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் கூட்டுறவு சங்க செயலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Blockage of milk purchase station as local milk sale stopped.

 

இதனால் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளூர் பால் விற்பனையை நிறுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ளூர் விற்பனையை நிறுத்தியதால் பால் வாங்க காத்திருந்த பொதுமக்கள், தேநீர் கடைக்காரர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் புதுக்கோட்டை ஆவின் எஸ்.ஒ திருப்பதி, மற்றும் கீரமங்கலம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வீடுகளுக்கு பால் விற்பனை செய்யலாம் என்றனர். ஆனால், கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆவினில் மாதாந்திர அட்டை போட்டு பாக்கெட் பால் வாங்கிக்கொள்ளட்டும் என்றனர் அதிகாரிகள்.

 

ஆனால், எங்கள் ஊரில் பாக்கெட் பாலில் டீக்கடை விற்பனை செய்ய முடியாது. எங்கள் ஊரில் உற்பத்தியாகும் பால் எங்களுக்கு வேண்டும் என்று அதிகாரியை முற்றுகையிட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்த பிறகு சில்லரை விற்பனை செய்யப்பட்டது. இனிமேலும் உள்ளூர் விற்பனை செய்வதை நிறுத்தினால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இன்று பால் விற்பனை செய்யாததால் கீரமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.