Advertisment

கருப்புப் பூஞ்சை: அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவ வசதி - ராமதாஸ் வலியுறுத்தல்

Black fungus: Ramadas insistence on medical facilities in all district hospitals

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவரும் நிலையில், இந்தியா முழுக்க கருப்பு பூஞ்சை எனும் நோய் பரவிவருகிறது. இது புதுவகையான நோய் இல்லை என்றும், ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்தலாம் எனவும் நேற்று (20.05.2021) செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் பரவல் அச்சத்திலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருப்புப் பூஞ்சை நோயைப் பதற்றமின்றி எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும்.

Advertisment

ஆங்கிலத்தில் மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை மிகவும் அரிதான, அதே நேரத்தில் மிகவும் கொடிய நோய் ஆகும். இந்தப் பூஞ்சைநோய் அனைவரையும் தாக்காது என்பதால் அச்சம் தேவையில்லை; கவனமும் விழிப்புணர்வும் இருந்தால் போதுமானது. நோய் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்ட் மருந்துகள், நமது உடலில் இயல்பாக உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை தற்காலிகமாக குறைப்பதால் அதைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றி காற்றிலும், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் வாழும் கருப்புப் பூஞ்சைகள் கண்கள், வாய் வழியாக நமது குருதியில் கலந்து நோயை உருவாக்குகின்றன.

இந்தியாவில் முதலில் உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம், தில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானவர்களை தாக்கிய இந்த நோய் இப்போது தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சுரேஷ் என்ற இளைஞருக்கு கருப்புப் பூஞ்சை நோயும் ஒரே நேரத்தில் தாக்கி, பார்வையை பறித்துள்ளது. சென்னையில் 12 வயது சிறுமி இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோயின் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதால் மக்களிடம் ஒருவிதமான அச்சம் பரவிவருகிறது. அது உடனடியாக போக்கப்பட வேண்டும்.

கருப்புப் பூஞ்சை கொடிய நோய் என்பதில் ஐயமில்லை. ஆனால், அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. கண்பார்வையைப் பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாக பரவி உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கரோனா நோய்க்கான சிகிச்சையின்போது ஸ்டீராய்ட் மருந்து செலுத்தப்பட்டதால்,குருதி சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிப்பவர்களுக்குத்தான் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் கரோனாவால் பாதிக்கப்படாதவர்களும் கூட, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். கண்களில் வீக்கம், வலி, கண்கள் சிவத்தல், பார்வைத் திறன் குறைதல், முகத்தில் வீக்கம், மூக்கிலிருந்து குருதி கலந்த திரவம் வடிதல் ஆகியவை கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீள முடியும்.

கருப்புப் பூஞ்சை நோய் தொடர்பாக தமிழகம் இப்போது எதிர்கொண்டுவரும் பெரும் பிரச்சினை இந்த நோய்க்கான மருந்து கிடைப்பதில் தட்டுப்பாட்டை போக்குவதும், இது தொடர்பாக மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்குவதும் ஆகும். யார், யாரையெல்லாம் இந்த நோய் தாக்கும்? அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? இதற்கான சிகிச்சை வசதிகள் எந்தெந்த மருத்துவமனைகளில் கிடைக்கும்? கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மட்டும்தான் தாக்குமா அல்லது சர்க்கரை அளவு அதிகமாக உள்ள அனைவரையும் இந்த நோய் தாக்குமா? என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மருத்துவ வல்லுனர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளை தொலைக்காட்சிகள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பச் செய்ய வேண்டும்.

கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) எனப்படும் ஊசி மருந்துக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இந்த மருந்து கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால்6 லட்சம் டோஸ் மருந்துகளை மத்திய அரசு இறக்குமதி செய்திருப்பதாக தெரிகிறது. அதிலிருந்துதமிழகத்திற்குரிய பங்கை பெற்றும், இந்த மருந்தை தயாரிக்கும் 6 தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தும் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்தக் கட்டமாக வட்ட மருத்துவமனைகளிலும் இந்த மருந்து மற்றும் மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும்.

கருப்புப் பூஞ்சை நோய் குறித்த விவரங்களை அறிந்து விழிப்புடன் இருப்பதாலும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலமும் இந்த நோயை வெல்ல முடியும். எனவே, மக்கள் கருப்புப் பூஞ்சை நோய் குறித்த அச்சம் இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

black fungus pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe