Skip to main content

கருப்பு நிற உடைக்கு தடை; பின்வாங்கிய பெரியார் பல்கலைக்கழகம்

Published on 27/06/2023 | Edited on 27/06/2023
black dress issue periyar university circular withdraw

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார்.

 

இதையடுத்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

 

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீண்டும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதுசமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி இவ்வலுவலக சுற்றறிக்கை வழியாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு மேற்காண் சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Rules of Conduct for Elections; Election Commission action order

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலர் நரேந்திர என் புடோலியா, மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசுப் பேருந்துகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடம் போன்ற பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள், சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது கட்அவுட்கள், பேனர், கொடிகள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்படுகிறது.

நாடு முழுவதும் இன்னும் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆணையத்திற்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. இதன் மூலம் அனைத்து அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களையும் உடனடியாக அகற்றி அதன் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை நாளை (21.03.2024) அன்று மாலை 5:00 மணி வரை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.