Advertisment

‘அதிமுகவை ஒழித்தால் தான் பாஜக ஒழியும்’ - அமைச்சர் உதயநிதி

'BJP will disappear only if AIADMK is abolished says Minister Udhayanidhi

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலாளரும்அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வருகின்ற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் இரண்டாவது மாநில அளவிலான இளைஞர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இளைஞர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மிகச்சிறந்த மாநாடாக இது அமைய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “அதேபோல் இளைஞர்கள் எந்த போராட்டத்திலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டாலும் மினிட் புக்கை அனைத்து இளைஞர் அமைப்பினரும் பயன்படுத்த வேண்டும். அதை பராமரிக்க வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுவதும் மூன்றரை லட்சம் இளைஞர்கள் திமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொண்டாலே போதும் அதுவே ஒரு பெரிய கூட்டமாக இருக்கும்” என்றார்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு கேலிக் கூத்து மாநாட்டை இளைஞர்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கையோ வரலாறோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வெறும் ஆட்டமும், பாட்டமும், நகைச்சுவையும், கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கு நாம் ஏன் அந்த மாநாட்டை நடத்தினோம் என்பதும் தெரியவில்லை. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நாம் ஏன் கலந்து கொண்டோம் என்பதும் தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு கேலிக் கூத்தான மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டியுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர் ஒருவர்மாநாட்டிற்கு அழைத்து வந்த தன்னுடைய மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரைப் பெற்றுக் கொண்டு காவல்துறையும் அவருடைய மனைவியைத்தேடி வருகிறது. அந்த மாநாட்டிற்கு பொறுப்பாளரான ஜெயக்குமாரிடம் தான் காணாமல் போன மனைவி பற்றி கேட்க வேண்டும்.” என்று கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பல போராட்டங்களை திமுகவின் இளைஞர் அணி நடத்தி வருகிறது. அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அடிமை அதிமுக அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நீட் தேர்வை உள்ளே அனுமதித்து விட்டது.

பாஜகவின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி மதிப்பிலான ஊழல் செய்துள்ளதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோமீட்டர் சாலைக்கு 280 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலைக்கு அதில் கணக்கு காட்டியுள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் என்ற ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீட்டில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். இப்படியே பல திட்டங்களில் லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல்களை செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் கலைஞரின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். தமிழ்நாடு முழுவதுமே கலைஞரின் குடும்பம் தான் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன். ஒன்றிய அரசின் மிகச்சிறந்த சாதனையாக கடந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் அதானியின் பல்வேறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான 15 லட்சம் கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. எனவே பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட பறந்து விடுவார். அதானி இல்லாமல் பறக்க மாட்டார்.” என்று கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை திட்டமிட்டு பழி வாங்கிய பாஜக. அவருடைய பதவியை பறித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தின் வாயிலாக தன்னுடைய பதவியை மீண்டும் மீட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை 2024லும் தொடரும் அதற்கான காலம் வந்துவிட்டது. இளைஞர் அணியாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன். ‘உன் வீட்டிற்குள் விஷப் பாம்பு ஒன்று வந்துவிட்டது அந்தப் பாம்பை அடித்து சாகடிப்பதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றது. மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அடிபட்ட அதே பாம்பு வீட்டுக்குள் வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போது வீட்டிற்கு அருகில் இருந்த புதருக்குள் மறைந்திருந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது’. இதில் வீடு என்பது தமிழ்நாடு ஆகவும், புதர் என்பது அதிமுகவாகவும், விஷப் பாம்பு என்பது ஒன்றிய பாஜக அரசுமாக உள்ளது. எனவே இந்த விஷப் பாம்பை அகற்ற வேண்டும் என்றால் முதலில் வீட்டிற்கு அருகில் மண்டியுள்ள புதரை அகற்ற வேண்டும். புதரை அகற்றினால் பாம்பும் ஒழிந்து விடும். எனவே இளைஞர் அணியின் மாநாடு விஷப் பாம்பை விரட்டக்கூடிய எழுச்சிமிகு மாநாடாக அமைய வேண்டும்” என்று தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ்உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe