BJP welcomes the decision of the Tamil Nadu government

ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 47 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளின் சார்பாக நாங்கள் முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை தமிழக பாஜக வரவேற்கிறது.

Advertisment

தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும் தமிழக பாஜக தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறது. முன்பைப்போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும், கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.