BJP vice president arrested in case of breaking temple lock admitted to government hospital!

பாரத மாதா கோயில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisment

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, 75வது சுதந்திர தினத்தையொட்டி, பாஜக சார்பில் அமுதப்பெருவிழா பாத யாத்திரை நடந்தது. பாஜக மாநிலத் துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம், பாத யாத்திரையைத் துவக்கி வைத்தார். இதையடுத்து, சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத மாதா கோயிலில் மாலை அணிவிக்கச் சென்றார். கோயின் வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், கண்காணிப்பாளரிடம் கதவைத் திறக்கும்படி கூறினார்.

Advertisment

அங்கிருந்த ஊழியரோ, உயர் அலுவலரின் அனுமதியின்றி நான் கதவைத் திறக்க முடியாது என்று கூறி, கதவைத் திறக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியினர், வாயில் கதவின் பூட்டை கல்லால் அடித்து உடைத்து, உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதையடுத்து, அரசு அனுமதியின்றி பாரத மாதா கோயில் கதவின் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே சென்றதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர், ராசிபுரத்தில் வசித்து வரும் கே.பி.ராமலிங்கத்தை, அவருடைய வீட்டில் வைத்து, ஆக. 14ம் தேதி கைது செய்தனர்.

நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட பாஜகவினர், அவரைக் காண சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டதால், அங்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.