பாஜக-விசிக மோதல்; கல்வீச்சால் பதற்றத்தில் கோயம்பேடு

சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி பாஜக சார்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டிருந்தனர். அதேநேரம் விசிகவின் தலைவர் திருமாவளவன் மரியாதை செய்ய விசிகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் விசிக தலைவர் வருகை காரணமாக ஊன்றப்பட்டிருந்த பாஜகவின் கொடிகளை அகற்றி விசிகவின் கொடியை அக்கட்சியினர் நட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக-விசிக கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் மோதல், கல்வீச்சு என்ற நிலையை எட்டியது. இந்த மோதலில் பாஜகவின் ஹரிகிருஷ்ணன் என்பவரின்மண்டை உடைந்தது. இதனால் சென்னை கோயம்பேட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மட்டுமல்லாது புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோல் பாஜக-விசிகவினர் இடையே அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

ambedkar Chennai pudukkottai Salem vck
இதையும் படியுங்கள்
Subscribe