BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ஏற்கனவே என்னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார். இருப்பினும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

அப்போது நீதிபதி எஸ்.ஆர்.சேகரை சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் அவரது செல்போனை ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசார் வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (11.07.2024) காலை ஆஜரானார். காலை 10.30 மணிக்கு ஆஜரானவரிடம் மாலை 06.30 மணி வரை என அவரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரிடம்190 கேள்விகளை சிபிசிஐடி போலீசார் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.