Advertisment

'எரியுதுடி மாலா ஃபேன போடு என கதறுகிறது பாஜக'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

BJP shouts 'Eriyuthudi malaa fana potu' - Chief Minister M.K.Stal's speech

Advertisment

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மேடையில் பேசிய அவர், 'திருமாவளவனை வெற்றி பெறவைக்க வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் இறக்கி விட்டிருக்கிறேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல் மயிலாடுதுறையின் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா வெற்றி பெற கை சின்னத்தில் வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயாராகி விட்டீர்களா? இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? இந்த மு.க.ஸ்டாலின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் உள்ள மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் பிரதமராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். சமூகநீதியை காண்கின்ற ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள்வதற்கு வாக்களிக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கிற பிரதமர் மோடிக்கு சமூகநீதி மேல் அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை மருந்துக்கு கூட நினைப்பதில்லை. சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை அவருக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்கு தேவையில்லை.

Advertisment

இந்த தேர்தல் மூலமாக இரண்டாம் விடுதலை போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுக்க பரவ கிடைத்த வாய்ப்பு தான் இந்தியா கூட்டணி. சமூக நீதி நமக்கு சும்மா கிடைத்ததில்லை. தியாகத்தால் விளைந்தது தான் சமூக நீதி. சமூக நீதிதான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய வகையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கமும் நம்முடைய கலைஞரும்தான். இரண்டு மூன்று தலைமுறையாகதான் நம்ம வீட்டில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வாரார்கள். முன்புஅத்திப்பூத்த மாதிரி சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர முடிந்தது. ஆனால் இப்பொழுது அதிகம்வர முடிகிறது. இதெல்லாம் பாஜகவினுடைய கண்ணை உறுத்துகிறது. இந்த வேலைக்கு இவர்களெல்லாம் இட ஒதுக்கீடால் வந்து விடுகிறார்களே என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா ஃபேன போடு' என்று கதறுவார்கள். இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து நம்ம குழந்தைகள் படித்து வேலைக்கு போவதை எடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன் தான் பாமக கூட்டணி பேசியிருக்கிறது'' என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe