BJP said shocking that TN govt is planning to increase Tasmac sales

தமிழக அரசின் நிதி நிலைமையை அதிகரிக்கச் செய்ய பல்வேறு வகைகளில் திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, டாஸ்மாக் விற்பனையை கூடுதலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளில் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருப்பதாகச் செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது வெட்கக்கேடானது.

Advertisment

இது சாதனை அல்ல; இது தமிழக மக்களின் குடும்பங்களை படுகுழியில் தள்ளும் வேதனையான முடிவு என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இதனால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் பாதிப்படையும் என்பதை உணர்ந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுக்கிறார். வி.சி.க. தலைவர் திருமாவளவன், மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதிகார மயக்கத்துடன் அதையே வழிமொழிகிறார்கள்.

Advertisment

ஆனால், மறுபக்கம் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை விட, தமிழர்களின் மகிழ்ச்சியை விட, டாஸ்மாக் நிறுவனத்தின் வளர்ச்சி, தன் கட்சிக்கும், அரசுக்கும், குடும்பத்திற்கும் உற்சாக வளர்ச்சி கொடுக்கும் என்பதை தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றார் போல் டாஸ்மார்க் விற்பனையை அதிகரிக்கும் வகையில் திட்டம் தீட்டி வருவது வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கையில் மீண்டும் டாஸ்மாக் நிறுவனம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத சக்திகள் சமூக விரோத சக்திகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"பார்" கலாச்சாரமும், ரவுடிகளின் "வார்" கலாச்சாரமும் மேலோங்கும் சாராய சாம்ராஜ்யமாகத் தமிழகம் மாறி வருவது ஆபத்தானது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும், போலி மது விற்பனை கட்டுப்படுத்த வேண்டும். 24 மணி நேரச் சட்ட விரோத பார்கள் தடுக்கப்பட்டு நடத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Advertisment

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் சாதனை படைக்க வேண்டும் என்ற தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை அமல்படுத்த உத்தரவிடும் மதுவிலக்குத்துறை அதிகாரிகளின் செயல்பாடும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முடிவும் கண்டிக்கத்தக்கது. ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து மக்களுக்கு நல்லது செய்யாமல், டாஸ்மார்க் கொள்ளைக்கு திட்டமிடும் அவருடைய பெயிலை கேன்சல் செய்து மக்களை காப்பாற்ற, அமலாக்கத்துறையை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.

எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாது. படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் இந்த உத்தரவு இலட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, துயரத்தை தரக்கூடிய, அவர்களின் சேமிப்பை கரைக்கக் கூடிய, குறிப்பாக தீபாவளி போனஸ் சமயத்தில் கிடைக்கும் பெருந்தொகையால் ஏழை நடுத்தர குடும்பங்களில், தங்களின் குடும்பத்துக்கு தேவையான, குறிப்பாக குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு தேவையான, திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான பொருட்களை வாங்கும் நேரத்தில், அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கத் தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் திட்டமிடுவது கொடுங்கோல் அரசாங்கம் நடத்துவதற்கு இணையானது.

ஏற்கனவே டாஸ்மாக் நிறுவன கொள்ளையால் பாதிக்கப்பட்ட தமிழக தாய்மார்கள், தீபாவளி சிறப்புமது விற்பனை இலக்கால் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. ஏழை நடுத்தர மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, தீபாவளி பண்டிகை திரு நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு வரும் தீபாவளி பண்டிகை திருவிழா காலமான அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட வேண்டும்.

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் நம் வீட்டிற்கு கொடுத்து, தமிழக அரசின் டாஸ்மாக் உரிமைத்தொகை என நம்மிடமிருந்து, மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து வருவதை தமிழக மக்கள் உணர வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக மாறி, மகளிர் வாழ்க்கையை சீர்குலைக்கும் அரசாக மாறி வருவதை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் அரசியல் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும். தங்களுக்கான உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.