குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடு முழுக்க போராட்டங்கள் வலுவாகி வரும் நிலையில் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வன்முறை இந்தியா முழுக்க பரவுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை ஈரோடு பா.ஜ.க.வினர் நடத்தினார்கள்.
இன்று காலையிலிருந்தே பாஜகவினர் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். இதனால் ஒரு வித பதட்டமும் பரபரப்பும் ஈரோட்டில் ஏற்பட்டது. பிறகு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க.வின் தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி மிக தெளிவாக விளக்கி விட்டார். இந்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று கூறிவிட்டார். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். மக்களிடையே அவர்கள் தான் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லி போன்று கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி நடத்துகிறோம்" என்றார்.
முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். பாஜகவினர் இந்த ஊர்வலத்தையொட்டி ஈரோடு பெருந்துறை சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறையில் இருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சம்பத் நகர் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.