ayya

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, இன்று திருச்செந்தூர் வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கோவில் வளாகத்தில் துண்டு பிரசுரம் கொடுப்பதை தடுத்தார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தகாத வர்த்தையில் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு குழுவினர் நெல்லையம்மாளை தாக்க முயற்சித்தனர். கோவில் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் நடந்த சம்பவத்தை தடுக்க போலீசார் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் வளாத்தில் இருந்த பக்தர்கள் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில், சம்பவத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பிரதமர் மோடி கொடுக்கக் கூடாது, அவருக்கு நல்ல எண்ணத்தை கொடுக்க வேண்டும், இந்த விதைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யமல் இருக்க கடவுளிடமும் வேண்டுகிறோம் என்றார்.

மேலும் இப்படி கோவிலில் வேண்டக் கூடாது என்றும், கோவிலில் நோட்டீஸ் கொடுக்க கூடாது என்று பாஜக பெண் நிர்வாகி தகராறு செய்தார் என்று கூறிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவை தடுத்த முதல் பிரதமர் மோடி மட்டுமே, அவர் விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.