Skip to main content

“உண்மை பேசிய உதயநிதி” - பாராட்டிய வானதி

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

bjp mla Vanathi Srinivasan Report to Chief Minister

 

‘மதங்களுக்கு எதிரி இல்லை' என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வாரா? என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில், கடந்த 5 ம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற, 2,500 திருக்கோயில்களுக்கு, 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், எங்களை, மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிறார்கள். நாங்கள் மதவாதத்திற்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. மதம் - ஜாதி வேற்றுமை மட்டுமல்ல, கோயில் - சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை" என்று பேசியிருக்கிறார். 

 

திராவிடம் என்ற சொல் யாருக்கும் பிடிக்காமல் போகாது, ஏனெனில், திராவிடம் என்பது இந்தியாவின் தெற்குப் பகுதியைக் குறிப்பது. திராவிடம் என்பது இனம் அல்ல. நிலப்பரப்பு. தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் அனைவரும் திராவிடர்கள்தான். ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் திட்டமிட்டு உருவாக்கியதுதான் திராவிட இனவாதம் மதம் மாற்றுவதற்காகத் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்ட, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் உருவாக்கிய சூழ்ச்சிதான் திராவிட இனவாதம். அந்த சூழ்ச்சியால்தான், நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியுள்ளது.

 

அதனால்தான். திராவிடர் கழகமும், திமுகவும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார்கள். இந்தியா வலுவான தேசமாக உருவெடுத்ததாலும், தமிழக மக்களிடம் பிரிவினைவாதம் எடுபடவில்லை என்பதாலும், பிரிவினை பேசினாலும், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்தான். பிரிவினையை திமுக கைவிட்டது. நாங்கள் மதவாதத்திற்குத்தான் எதிரி, மதங்களுக்கு அல்ல என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

 

மதங்களுக்கு எதிரி இல்லை என்றால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என்பதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது மட்டுமல்ல, அவர்களின் மத நிகழ்வுகளிலும் முதலமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர்.

 

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "நானும் கிறிஸ்தவன்தான். நான் காதலித்து மணந்த மனைவியும் கிறிஸ்தவர்தான்" என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். உண்மை பேசிய அவருக்கு பாராட்டுகள். அதுபோல தி.மு.க.வில் இருக்கும் மற்ற தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல, தி.மு.க. தலைமை அனுமதிக்குமா? என்பது இந்து விரோத கட்சி என்பதை, அக்கட்சி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது. 

 

குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்குக் கூட வாழ்த்து சொல்ல மனமில்லாத முதலமைச்சர், நாங்கள் மதங்களுக்கு எதிரி அல்ல என்று சொல்வது, வழக்கம் போல, இந்துக்களை ஏமாற்றம் தந்திரம்தான். இதனைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். இனியும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது, நாங்கள் மதங்களுக்கு எதிரி இல்லை என்பது முதலமைச்சரின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோவில்கள், மடங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மதங்களை மதிப்பது. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.