Advertisment

பதற்றத்தை ஏற்படுத்த திருவிழாவில் போராட்டம்... பாஜக எம்.எல்.ஏ கைது!

BJP MLA arrested for creating tension at festival

Advertisment

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் கோவில். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும் சென்ற இரு ஆண்டுகளாக கரோனா விதிமுறைப்படி நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை இந்த ஆண்டு அத் திருவிழா 31ந் தேதி நடைபெற்றது. மாநகர மற்றும் புறநகர்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் தொடர்ந்து இருவாரங்கள் இக்கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்த மாரியம்மன் கோவில் ஈரோட்டின் பிரதான சாலையான பிரப் சாலையில் உள்ளது. இக்கோவிலுக்குப் பின்புறம் கிருத்துவர்களின் சி.எஸ்.ஐ. நிறுவன பள்ளி, மருத்துவமனைகள் என பல ஏக்கர் நிலத்தில் உள்ளது. நீண்ட காலமாக இந்து மத அமைப்புகள் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை தான் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ அமைப்பு ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு ஒவ்வொரு வருட கோவில் திருவிழாவின் போதும் ஏதாவது ஒரு வகையில் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு மத மோதல் பதட்டத்தை ஏற்படுத்துவார்கள்.

நேரடியாக பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். என்று களத்தில் இறங்காமல் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் என்ற பெயரில் இந்த போராட்டம் நடக்கும். இவ்வருடமும் அந்த அமைப்பின் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி மாரியம்மன் கோவில் முன்பு 5,001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தனர்.

31ந் தேதி காலை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் என்ற பெயரில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் 30-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். பா.ஜ.க. மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தலைமையில் நிர்வாகிகள், 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று போலீஸ் தடையை மீறி 10 தேங்காய்களை மட்டும் உடைத்து விட்டு சம்பந்தமில்லாமல் 'பாரத் மாதாகிஜெ' என கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ உட்பட 24 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் சுய விளம்பர அரசியலுக்காக மத பகைமையை உருவாக்க தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ உள்பட 24 பேர் மீதும் ஈரோடு போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

பக்தர்கள் தெய்வ நம்பிக்கைக்காக அதிகம் கூடும் இடங்களிலெல்லாம் பா.ஜ.க.வினர் மத அரசியலைப் புகுத்தி அரசியல் லாபத்தை அள்ள முயல்வது தொடர்ந்து நடைபெறுகிறது.

police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe