பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர், துணை முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினி, புதிய தமிழக கட்சி தலைவரை கிருஷ்ணசாமி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா. இவரது மகள் சிந்துஜா, சூர்யா திருமணம், கடந்த 15ம் தேதி, காரைக்குடியில் நடந்தது. நேற்று, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், மணமக்களை வாழ்த்தினர்.பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், சுப்பிரமணியசாமி, வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், த.மா.கா., தலைவர் வாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, நடிகர் ரஜினிகாந்த், நடிகை கவுதமி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் 24-11-2019 அன்று சென்னையில் நடைபெற்ற எனது இளைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.